Tuesday, June 13, 2017

மருத்துவப் படிப்புக்கு விரைவில் விண்ணப்ப விநியோகம்: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்

நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படுகிறது. தமிழக அரசு உத்தரவிட்டதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்தார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) முடிவுகள் வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வரும் 26-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது. இதை யடுத்து விரைவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மத்தியஇடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவு செய்துள்ளது.


நீட் தேர்வு

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 65 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள், 25 ஆயிரம் பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18-ம் ஆண்டு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை சிபிஎஸ்இ நாடுமுழுவதும் கடந்த மே மாதம் 7-ம் தேதி நடத்தியது.தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் 80-க்கும் மேற்பட்ட மையங்கள் உட்பட நாடுமுழுவதும் 103 நகரங்களில் 1,921 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

உயர் நீதிமன்றம் தடை

கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் மட்டும் நடந்த நீட் தேர்வு, இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாம், வங்காளம் ஆகிய 10 மொழிகளில் நடந்தது.நீட் தேர்வுக்கு தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் உட்பட நாடுமுழுவதும் 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 95 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். ஜூன் மாதம் 8-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்ப விநியோகம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் எப்போது தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எட்வின் ஜோவிடம் கேட்ட போது, “மருத்துவப் படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் மற்றும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படை யில்2 விதமான விண்ணப்பங்கள், வழிகாட்டி கையேடுகள் தயார் நிலையில் உள்ளன.நீட் தேர்வு முடிவுகள் வெளி யானதும், தமிழக அரசு எந்த அடிப் படையில் மாணவர் சேர்க்கை என்பதை அறிவிக்கிறதோ அதற்கு ஏற்ப விண்ணப்பங்கள் மற்றும் வழிகாட்டி கையேடுகள் விநி யோகிக்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment

Auto Scroll Stop Scroll