Tuesday, June 13, 2017

மாணவர் தேர்ச்சி விகித அடிப்படையில் பொறியியல் கல்லூரிகள் தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு?

மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட உள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற உள்ள மாணவர்களுக்கு மிகுந்த பயன்தரக் கூடிய இந்தப் பட்டியல் செவ்வாய் (ஜூன் 13) அல்லது புதன்கிழமையில் பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu   என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய அளவில் அதிக பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள விவரத்தின் அடிப்படையில் 2017-18-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரத்தில் 372 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் இதைவிடக் குறைந்த எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகளே உள்ளன.
இந்த கூடுதல் எண்ணிக்கை காரணமாக, 523 கல்லூரிகளில் சிறந்த பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்வது என்பது ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களக்கும், அவர்களின் பெற்றோருக்கும் சவாலான பணியாகவே இருந்து வருகிறது.
கல்லூரிகளை நேரில் சென்று ஆய்வு செய்வது, சம்பந்தப்பட்ட கல்லூரி இணையதளத்தில் விவரங்களைப் பார்ப்பது, கல்லூரி முன்னாள் மாணவர்களிடம் விசாரிப்பதன் மூலம் கல்லூரியின் தரத்தை ஓரளவுக்குத்தான் கணிக்க முடியும் என்பதால், மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அனைவரும் பார்க்கும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகள் பட்டியலை வெளியட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில், 2014-15-ஆம் கல்வியாண்டு பொறியியல் சேர்க்கை முதல் இந்தப் பட்டியலை பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில், 2017-18-ஆம் கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கு முன்னதாக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதப் பட்டியலை வெளியிடுவதற்கான பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியது: பொறியியல் கல்லூரிகளுக்கான இறுதிப் பருவ (8-ஆம் பருவ) தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. நீதிமன்ற உத்தரவின்படி, இறுதிப் பருவத் தேர்வில் மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான பொறியியல் கல்லூரிகள் பட்டியலைத் தயாரித்து வருகிறோம்.

இந்தப் பட்டியல் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பொறியியல் சேர்க்கை பெற உள்ள மாணவர்கள் இதைப் பார்த்து பயன்பெறலாம் என்றனர்.

No comments:

Post a Comment

Auto Scroll Stop Scroll